சளி, இருமலை போக்கும் மிளகு உணவுகள் !

மசாலா பொருட்களின் மன்னன் யார் தெரியுமா?

மிளகு! 

இது கொடி  வகையை சார்ந்தது. கொடியில் கனிகள் காய்ந்தவுடன்  சிறந்த நறுமணத்தை தருகிறது. அதனால் மசாலாக்களில் தலைசிறந்த நறுமணப் பொருளாகிறது.

உலகிலேயே கேரள மாநிலத்தில்தான் மிளகு அதிகம் உற்பத்தியாகின்றது.

பழங்காலத்தில் வணிகத்தில் மதிப்பு மிக்க பொருளாக இருந்தது, மிளகு. அதனால் இது கறுப்பு தங்கம் என்றழைக்கப்பட்டது.

மிளகிற்கு பின்பு பல சுவாரசியமான வரலாற்று தகவல்கள்  இருக்கின்றன. கேரளாவில் இருந்து அரபி கடல் வழியாக மிளகு அரேபியாவிற்கு ஏற்றுமதியானது. அங்கிருந்து, ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்பப்பட்டது.

ஐரோப்பியர்கள் நம் நாட்டின் மிளகு மற்றும் நறுமணப் பொருட்கள் மீது அதிக நாட்டம் கொண்டனர். அதனால்தான் கடல் வழியாக இந்தியாவை தேடிக் கண்டு பிடித்தனர். 

மிளகை வாங்க வந்தவர்கள் படிப்படியாக  வியாபாரத்தை விரிவுபடுத்தி நம் நாட்டையே பிடித்து கொண்டனர்.

முற்காலத்தில் இருந்து நம் நாட்டில் கார சுவைக்கு நாம் மிளகைதான் பயன்படுத்தி வந்தோம். அதனால் சங்க இலக்கியங்களில் மிளகை பற்றிய குறிப்புகள் உள்ளன.

சித்த மருத்துவத்திலும் மிளகிற்கு சிறப்பிடம் இருக்கிறது.

‘பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்!’ என்பது பழமொழி.

ஒவ்வாமைக்கு சிறந்த மருந்து மிளகு. சளி, இருமல், ஆஸ்துமா போன்றவைகளுக்கும் இது மருந்தாகின்றது. ஒவ்வாமையால் ஏற்படும் தொடர் தும்மலுக்கும் மிளகை பயன்படுத்தலாம்.

1 தேக்கரண்டி மிளகை இடித்து, 200 மி.லி. நீரில் கொதிக்க  வைத்து பனவெல்லம்  அல்லது தேன் கலந்து குடிப்பது பலவித நோய்களை கட்டுப்படுத்தும்.

ஒவ்வாமை மற்றும் பூச்சி  கடி காரணமாக தோலில்  தடிப்பு, அரிப்பு உண்டாகும். இதற்கு ஒரு தேக்கரண்டி மிளகை பொடி  செய்து, அருகம்புல் ஒரு கைபிடி அளவு சேர்த்து, 200 மி.லி. நீரில் கொதிக்க வைத்து குடிக்கவேண்டும்.

பூச்சி கடி மற்றும் ஒவ்வாமையால் அவதிப்படும்போது முதல் வேலையாக ஒரு தேக்கரண்டி மிளகை நீரில் கொதிக்க வைத்து தேன் கலந்து பருகிவிடவேண்டும்.

மழைக்காலத்தில் அடுக்கடுக்காக தும்மல், கண்களை சுற்றிய அரிப்பு, மூக்கில் நீர் வழிதல் போன்றவை ஏற்படும். இதற்கு ஒரு தேக்கரண்டி மிளகையும், ஒரு வெற்றிலையையும் நீரில் கொதிக்கவைத்து பருகவேண்டும். இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும். 

தொண்டை கட்டு,  குரல் கம்மல், தொண்டை வலி போன்றவை இருந்தால்,  ஒரு தேக்கரண்டி மிளகை நெய்யில் கருக வைத்து பொடித்து  தேன் கலந்து சாப்பிடவேண்டும். விட்டுவிட்டு வரும் காய்ச்சலுக்கும் மிளகு கஷாயம் சிறந்தது. ஜீரண சக்தியையும் மேம்படுத்தும். 

மிளகின் காரத்தன்மைக்கு ‘காப்சாய்சின்’ என்ற வேதிப்பொருள் காரணமாக உள்ளது. மிளகின் காரம் கொழுப்பையும் ஜீரணிக்கவைக்கும். இதனால் ரத்த குழாய்களில் கொழுப்பு  படியாது. ரத்த குழாய் தடிமனாவதும் தவிர்க்கப்படும். உடலில் உள்ள செல்களை பாதுகாக்கும் ‘ஆன்டி  ஆக்ஸிடண்ட்’  தன்மையும் மிளகிற்கு உள்ளது. 

பசி குறைவாக உள்ள சமயங்களில், ஒரு தேக்கரண்டி மிளகு பொடியை நாட்டு சர்க்கரையுடன் கலந்து சாப்பிட வேண்டும். 

மூல  நோய்களுக்கு ஒரு தேக்கரண்டி மிளகு பொடியுடன், ஒரு தேக்கரண்டி பெருஞ்சீரகத்தை பொடி செய்து தேன் கலந்து சாப்பிடவேண்டும். மிளகின் காரத்தன்மை மலத்தை வெளியேற்றும் சக்தி கொண்டது.

பல் சொத்தை, பல் கூச்சம் ஏற்படும்போது, மிளகு பொடியுடன் உப்பு கலந்து பல் தேய்க்கவேண்டும்.

தலையில் சிலருக்கு  புழு வெட்டு ஏற்படும். அவர்கள் மிளகுதூள், உப்பு, வெங்காயத்தை சேர்த்து அரைத்து பாதித்த இடத்தில் பூசினால், மீண்டும் முடி வளரும்.

தலையில் பொடுகு ஏற்படும்போது மிளகை அரைத்து பாலில் கலந்து கொதிக்கவிட்டு, ஆறவைக்கவேண்டும்.  பின்பு அதை தலையில் தேய்த்து சிறிது நேரம் கழித்து குளித்தால், பொடுகு நீங்கும்.

மிளகில் தயாராகும் சுவை மிகுந்த உணவுகள்: 


அன்னம்

பச்சரிசி–    200 கிராம் (வேக வைத்துக் கொள்ளவும்)

மிளகு–    2 தேக்கரண்டி

கடலைபருப்பு–1 தேக்கரண்டி

உளுத்தம் பருப்பு–1 தேக்கரண்டி

உப்பு–தேவைக்கு

தாளிக்க:

கடுகு–1 தேக்கரண்டி

கறிவேப்பிலை–சிறிதளவு    

பெருங்காயம்–அரைதேக்கரண்டி    

நல்லெண்ணெய்–2 தேக்கரண்டி

செய்முறை:

  வாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு மிளகு, கடலை பருப்பு, உளுத்தம் பருப்பை வறுத்து தறியாக பொடித்துக் கொள்ளவும்.  

  வடித்துவைத்துள்ள சாதத்தில்  அரைத்தபொடி, உப்பை சேர்க்கவும். தாளிக்கவேண்டிய பொருட்களை தாளித்து கொட்டி, கிளறவும்.

  வயிற்று கோளாறுகளை அகற்றி உணவு நன்கு ஜீரணிக்க உதவும். குளிர்காலத்திற்கு ஏற்ற உணவு. சளி, இருமல், தலையில் நீர் ஏற்றத்தால் உண்டாகும் தலைவலி போன்றவைகள் நீங்கும்.  ஸ்பெஷல் பால்

பால்–250 மி.லி.

மிளகு–1 தேக்கரண்டி

மஞ்சள்தூள்–1/2  தேக்கரண்டி

பனங்கற்கண்டு–தேவைக்கு

செய்முறை:

  பாலை காய்ச்சவும். மிளகை பொடி செய்து பாலுடன் கலந்து, மஞ்சள் தூள் மற்றும் பனங்கற்கண்டு சேர்த்து, சூடாக பருகவும்.

  ஆஸ்துமா நோயாளிகள் சளி, இருமல்   தொந்தரவால் துன்பப்படுபவர்கள் இதை பருகலாம். பாலின் கப தன்மை மிளகு சேருவதால் குறையும்.

  சிறுவயதில் இருந்தே குழந்தைகளை, இதை பருக பழக்கப்படுத்தலாம்.

ரசம்

மிளகு–2 தேக்கரண்டி

சீரகம்–2 தேக்கரண்டி

துவரம் பருப்பு–1 தேக்கரண்டி  

புளி–சிறு எலுமிச்சம் பழம் அளவு

உப்பு–தேவைக்கு

தாளிக்க:

கடுகு–1 தேக்கரண்டி  

கறிவேப்பிலை–சிறிதளவு

நெய்–1 தேக்கரண்டி

பெருங்காய பொடி–1/2  தேக்கரண்டி

செய்முறை:

  புளியை ஊற வைத்து கரைத்துக் கொள்ளவும். 

  துவரம் பருப்பு, மிளகு, சீரகத்தை பத்து நிமிடம் நீரில் ஊற வைத்து தறியாக அரைத்துக் கொள்ளவும்.

   பாத்திரத்தில் புளியை கரைத்து கொதிக்க வைக்கவேண்டும். நன்கு கொதிக்கும்போது, அரைத்து வைத்துள்ள கலவையை அதில் கொட்டவேண்டும். உப்பும் சேர்த்து, சிறு தீயில் நன்கு கொதிக்க வைக்க வேண்டும். பின்பு நெய்யில் தாளிக்க வேண்டிய பொருட்களை தாளித்து, சேர்க்கவும்.

   உடல்வலி, மூட்டு வலி, ஜீரணக்கோளாறு, சளி, இருமல் தொந்தரவு இருக்கும்போது சூடான சாதத்துடன் கலந்து சாப்பிடலாம். தொண்டை வலி, சளி, இருமல் இருக்கும்போது சூப் போன்றும் பருகலாம். புழுங்கல் அரிசி கஞ்சியில் இந்த ரசத்தை கலந்து பருகினால் தொண்டைக்கு இதமாக இருக்கும்.

அடை

பச்சரிசி–    200 கிராம் 

புழுங்கலரிசி–200 கிராம்

துவரம் பருப்பு–2 தேக்கரண்டி

உளுத்தம் பருப்பு–2 தேக்கரண்டி

மிளகு–2தேக்கரண்டி  

(பொடித்து கொள்ளவும்)

தேங்காய் பெரிய துண்டுகள் –2

(சிறிதாக நறுக்கிக்கொள்ளவும்)

உப்பு–தேவைக்கு

நல்லெண்ணெய்–தேவைக்கு

செய்முறை:

  பருப்பு மற்றும் அரிசியை மூன்று  மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும். பின்பு அதனை அரைக்கவும். அதில் மிளகு தூள், தேங்காய், உப்பு போன்றவைகளை கலந்து கொள்ளவும்.

  இந்த மாவை தோசை கல்லில் ஊற்றி  அடையாக  செய்து சூடாக சாப்பிடவும். இதற்கு  தேங்காய் சட்னி நன்றாக இருக்கும்.

  குளிர்காலத்திற்கு ஏற்ற சத்துக்கள் இருக்கின்றன. நோய் எதிர்ப்பு சக்தியும் இருக்கிறது. குழந்தைகளுக்கு நல்லது.
                                                           நன்றி
டாக்டர்  இரா. பத்மப்ரியா (சித்த மருத்துவர்)
                                                          DailyThanthi Paper News.
Social share:

G+1

Message plus récent Messages plus anciens Accueil

Tips

வாஸ்துப்படி வீட்டுல இந்த இடத்துல கடிகாரத்தை வைத்தால் , வீட்டில் செல்வம் குவியும்!

ஒரு வீட்டில் நாம் பிரச்சனையின்றி சந்தோஷமாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பதில் வாஸ்து முக்கிய பங்கை வகிக்கிறது. எனவே தான் குடிப்புகும் முன், அந...

loading...